×

ஆட்டையாம்பட்டி பகுதியில் ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி

ஆட்டையாம்பட்டி, பிப்.21: ஆட்டையாம்பட்டியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை கால்வாய் பணியால், கழிவுநீர் தேங்கி தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்டையாம்பட்டியில், மழை காலங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வெண்ணந்தூர் பிரதான சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  கழிவுநீர் தேங்காமல்  இருக்க, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், சாலையில் இருபுறமும் ₹1 கோடி மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி, கடந்த 5 மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் ஒருபுறம் மட்டும் பணிகள் முடிந்த நிலையில், மறுபுறம் சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குழி தோண்டப்பட்டது. முதல்கட்டமாக ஒரு அடி வரை ஜல்லிக்கற்கள் கொட்டி விட்டு, பணியை பாதியில் நிறுத்தி விட்டனர். இதனால், கடந்த 25 நாட்களாக இந்த சாக்கடையில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், தேங்கி பச்சை நிறத்தில் மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தீவிரப்படுத்தி, கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி