வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் சேலத்திற்கு தர்பூசணி வரத்து 50டன்னாக அதிகரிப்பு

சேலம், பிப்.21: சேலம் மார்க்கெட்டுக்கு தினசரி 50 டன் தர்பூசணி பழங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தாண்டியது. வெயில் காரணமாக தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், ஜூஸ் வகைகள் உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் காரணமாக கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது.  இது குறித்து சேலம் தர்பூசணி மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி தமிழகத்தில் பல இடங்களுக்கும், இதைதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் 10 முதல் 15 டன் இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, தற்போது 50 டன்னாக உயர்ந்துள்ளது. இங்கு விற்பனைக்கு வரும் தர்பூசணியை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று கிலோ ₹30 முதல் ₹40 என விற்பனை செய்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: