மார்ச் 1ல் தொடக்கம் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 40,068 பேர் எழுதுகிறார்கள்

சேலம், பிப்.21: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ம்தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது. 120 மையங்களில் 40,068 பேர் எழுதுகின்றனர்.    நடப்பாண்டுக்கான (2019) இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், ‘‘அரசுத் தேர்வுத் துறை சார்பில் நடப்புக் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வுகள் பொதுத் தேர்வுகள்மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம்தேதி வரை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 120 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.  பிளஸ்2 பொதுத் தேர்வை 18,734 ஆண்களும்,21,334 பெண்களும் என மொத்தம் 40,068 தேர்வர்களும், பிளஸ்1 பொதுத்தேர்வை 17,034 ஆண்களும், 20,323 பெண்களும் என மொத்தம் 37,357 தேர்வர்களும் எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14ம் தேதி  முதல் மார்ச் 29ம் தேதி முடிய உள்ள நாட்களில், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 152 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை 45,278 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்,’’ என்றார்.

ேதர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப் பொது தேர்வுகளுக்காக 13 வினாத்தாள் கட்டுக் காப்புமையங்களும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக 14 வினாத்தாள் கட்டுக் காப்புமையங்களும் அமைக்கப்பட்டு, இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம்செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வினாத்தாள் அடங்கிய மந்தணகட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இக்காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்டபகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது, உரிய காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி)வந்தனா கார்க் உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Related Stories: