×

பயிர் காப்பீடு வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ராமநாதபுரம், பிப். 21: பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் செங்குடி மற்றும் வ.பரமக்குடி கிராம விவசாயிகள் சார்பில் செங்குடி அதிமுக கிளைச்செயலாளர் அருள்சூசை, முன்னாள் கிராமத்தலைவர் செங்கோல் தலைமையில் கலெக்டர் வீரராகவராவிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் விவசாயம் இல்லை. கண்மாய் பாசனம் இல்லாமல் வானம் பார்த்த பூமியாக எங்கள் பகுதி உள்ளது. கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது.
கடந்த 2016-17 விளைச்சல் இல்லை என்பதை விவசாயத்துறை அதிகாரிகளும் இன்சூரன்ஸ் அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றனர். 100 சதவீதம் விளைச்சல் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரும் 25 சதவீதம் மட்டுமே கிடைத்தது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்தோம். மனுவை பரிசீலனை செய்து 75 சதவீதம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை கிடைக்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உங்களிடம் (கலெக்டர்) மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் 2017-18ம் ஆண்டு 18 சதவீதம் இழப்பீடு தொகை மட்டுமே மாவட்ட நிர்வாகம் வழங்கப் போவதாக மக்கள் மத்தியில் தகவல் பரவிவருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து பலர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான இழப்பீடு தொகை 100 சதவீதம் வழங்காவிட்டால் இரண்டு கிராம மக்கள் சுமார் 3 ஆயிரம் பேர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவோம்’ என தெரிவித்துள்ளனர்.

அதிமுக கிளைச்செயலாளர் அருள்சூசை கூறுகையில், ‘மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் விவசாயம் இல்லை. உரிய இழப்பீடு வழங்கினால்தான் விவசாயிகள் வாழமுடியும். கோரிக்கை மனு அளித்தே சோர்ந்து விட்டோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கிராம மக்கள் அனைவரும் புறக்கணிக்க உள்ளோம்’ என்றார்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...