×

திருமங்கலம் பஸ் நிலையத்தில் இடநெருக்கடியால் திணறும் அரசு பஸ் டிரைவர்கள்

திருமங்கலம், பிப்.21: கடும் இடநெருக்கடி நிலவுவதால் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டு வருகிறது. திருமங்கலம் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் இயங்கி வருகிறது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகள், விருதுநகர், காரியாபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் சுற்றுபுற பகுதிகளுக்கு ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. சுமார் 20 பஸ்கள் நிற்க மட்டுமே இடம் உள்ள பஸ் ஸ்டாண்டில் தற்போது நிமிடத்திற்கு 30க்கும் குறைவில்லாமல் டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மதுரை நகரிலுள்ள அனைத்து டிப்போக்களில் இருந்து டவுன் பஸ்கள் திருமங்கலத்திற்கு இயக்கப்படுவதால் கடும் இடநெருக்கடியில் பஸ் ஸ்டாண்ட் சிக்கி தவிக்கிறது. பல நேரங்களில் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்களை வெளியே எடுக்க முடியாமலும், பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ளே புக முடியாமலும் பஸ் டிரைவர்கள் திணறி வருகின்றன.

இதனால் தினசரி காலை, மதியம் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் முன்புற பகுதியில் கடும் இடநெருக்கடி உண்டாகிறது. இதனால் மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வெளியூர் பஸ்களையும் பாதிப்பதால் மதுரை ரோடு, விருதுநகர் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது. பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் பஸ்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமங்கலம் வரும் டவுன் பஸ் அனைத்தையும் ஓரிரு நிமிடத்தில் பஸ்களை கிளப்பி செல்ல டிரைவர்களுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். பஸ் ஸ்டாண்ட்டிற்குள் பஸ்களை நிறுத்தி விட்டு சுமார் 20 நிமிடம், அரைமணி நேரம் வரையில் கூட சில பஸ்களை எடுப்பதில்லை. இதனால் பிற பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வரமுடியாத நிலை உண்டாகியுள்ளது.

மேலும் மதுரைக்கு புறப்படும் பஸ்கள் குறிப்பாக ஆரப்பாளையம் மார்க்கத்தில் செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் சுமார் 10 நிமிடத்திற்கு மேல்நிறுத்தி வெளியூர் பயணிகளை ஏற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் கிராமபுற பஸ்களை பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்து வெளியே எடுக்க முடியாமல் மற்ற பஸ் டிரைவர்கள் திணறி வருகின்றனர். இதனையும் கட்டுப்படுத்த போலீசார், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : bus drivers ,government ,bus stand ,Tirumangalam ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை