மூன்றுமாவடி-அய்யர்பங்களா இடையே நடுரோட்டில் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்

மதுரை, பிப்.21: மூன்றுமாவடி முதல் அய்யர்பங்களா வரையிலான பிரதான ரோடு இருவழிப் பாதையை முழுமையாக்குவதற்கு கால்வாய் அமைக்கும் பணி தினகரன் செய்தி எதிரொலியால் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரையில் கோ.புதூரை அடுத்த அழகர்கோவில் மெயின் ரோட்டில், மூன்றுமாவடியில் இருந்து பிரிந்து புதுநத்தம் ரோட்டில் ஐயர்பங்களாவில் இணையும் பிரதான ரோடு 3 கி.மீ தூரம் வரை நீள்கிறது. இந்த பிரதான சாலையில் நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் நடுவில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான மழைநீர் வாய்க்கால் செல்கிறது. அதாவது மூன்றுமாவடியிலிருந்து அய்யர்பங்களா பிரதான ரோடு பகுதியில் ஜிஆர் நகர் மேற்குத் தெரு வரை இரு வழிப்பாதை உள்ளது. ஜிஆர் நகரில் இருந்து அன்புநகர், மூன்றுமாவடி வரை நடுவில் வாய்க்கால் மாயமாகியது. இதனால் இருவழிப்பாதையும் ஒரு வழிப்பாதையாக சுருங்கி நின்றது.

இந்த இடத்தில் பெயரளவில் மாநகராட்சி கரடுமுரடான சாலையை மட்டுமே அமைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டது. குறுக்கிடும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. ஜிஆர் நகர் முதல் தெரு நுழைவு பாதையில் சமுதாயக் கூடம், மகாலட்சுமி நகர் 4வது தெரு நுழைவு பாதைக்கு எதிரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் போன்றவை ரோடு போட இடையூறாக நின்று வருகின்றன. மொத்தத்திற்கு இந்த பிரதான ரோட்டில் இருவழிப்பாதை திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. பொதுப்பணித் துறை, மாநகராட்சி இணைந்து பணிகளை துவக்கினால் மட்டுமே இத்திட்டம் நிறைவு பெறும். இந்நிலையில் மாநகராட்சி ரூ.18 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையை முழுமையாக்க முடிவு செய்தது. நடுவில் வாய்க்கால் முழுமையாக அமைத்தால் தான் இருவழிப்பாதையை நிறைவேற்ற முடியும். இதனால் இருவழிப்பாதைக்கு  நடுவில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது.

அய்யர்பங்களாவை கடந்து பனங்காடி வரை வாய்க்கால் தோண்டப்பட்டது. தொடர்ந்து அய்யர்பங்களா முதல் மூன்றுமாவடி வரை வாய்க்கால் தோண்டாமல் கிடப்பில் விடப்பட்டிருந்தது. இதுகுறித்து தினகரனில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இருவழிப்பாதை முழுமை பெறுவதற்கு அரைகுறையாக விடப்பட்ட வாய்க்கால் தோண்டும் பணியை பொதுப்பணி துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். விரைவில் இப்பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: