கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் வைகையில் நீர் ஆவியாவது அதிகரிப்பு

மதுரை, பிப். 21: கோடைக்கு முன்பே வெயில் கொளுத்துவதால், வைகை அணை நீர் ஆவியாவது அதிகரித்து வருகிறது. இதனால் கோடையில் குடிநீர் பிரச்னை கேள்வி குறியாகிறது. ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். ஆனால் தற்போது பிப்ரவரியிலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மதிய வேளையில் வெளியிலால் தலைகாட்ட முடியவில்லை.  இப்போதே இப்படி சுட்டெரித்தால், அடுத்து கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடங்கி 28 வரை நீடிக்கும் காலக்கட்டத்தில் அனலாக கொதிக்கும் என அஞ்சப்படுகிறது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடந்த 2018ம் ஆண்டு கோடை வெயில் மதுரையில் 108 டிகிரி தாண்டியது. இந்த ஆண்டு 110 டிகிரி தாண்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான வைகை அணை நீர் வேகமாக காலியாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 47.77 அடியாக சரிந்தது. குடிநீருக்கு 60 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் வெயிலின் கடுமையால் அணை நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. ஒரு நாளில் ஒரு மில்லியன் கனஅடி அளவுக்கு ஆவியாகிக் கொண்டு இருப்பதாக பொதுப்பணித்துறையினர் கணக்கிட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது ஆவியாகும் அளவும் உயரும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115.70 அடியாக உள்ளது. அங்கிருந்து 300 கன அடி வீதம் திறக்கப்பட்டாலும், பெரும்பாலான நாட்கள் வைகைக்கு வந்து சேருவதே இல்லை. நேற்று 39 கனஅடி மட்டுமே வந்தது. அணையிலுள்ள நீரை இறுதி வரை அதாவது இன்னும் 100 நாட்கள் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வேண்டும். ஆனால் அதற்கு ஏற்ற அளவுக்கு அணையில் தண்ணீர் இருப்பு இல்லை. தற்போது இருப்பிலுள்ள நீரை வைத்து ஏப்ரல் வரை மட்டுமே சமாளிக்க முடியும். இடையில் கோடை மழை கை கொடுத்தால் தான் உண்டு. தவறினால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரை சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வைகை ஆற்றில் மேலக்கால், கோச்சடை, மணலூர் போன்ற பகுதிகளிலுள்ள குடிநீர் ஆதார கிணறுகளில் இருந்து கிடைக்கும் அளவும் குறைந்து வருகிறது. போர்வெல் மூலம் கிடைக்கும் நீரின் அளவு குறைவதால், அனைத்து உபயோகத்திற்கும் குடிநீரை நாடும் நிலை ஏற்படுகிறது. இதனால் குடிநீரின் தேவை அதிகரிக்கிறது. குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சும் சூழல் நிலவுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் குளறுபடியாகிறது.

அதிகாரி ஒருவர் கூறும்போது, “குடிநீர் பிரச்னை மக்களவை தேர்தலில் எதிரொலித்து சிக்கலை உண்டாக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அணையில் நீர் இருப்பு குறைந்திருப்பது சிக்கலாக உள்ளது. சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, தண்ணீர் திறக்க முடியுமா? என்பது கேள்வி குறியானது தான். தேர்தல் நேரத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிப்பது தான் கேள்விகுறியாக எழுகிறது.” என்றார்.

Related Stories: