ரயில்வே மேம்பால பணிக்காக சாலை போக்குவரத்து மாற்றம்

திருமங்கலம், பிப்.21: மதுரை-கன்னியாகுமரி இரட்டைவழி ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதால், வடகரை தரைபாலத்தில் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இரட்டை அகல ரயில்பாதை பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக ஏற்கனவே உள்ள ரயில் மேம்பாலம், தரைபாலங்கள் அருகே புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து கள்ளிக்குடி வரையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. திருமங்கலம் நகர் அருகேயுள்ள வடகரை செல்லும் பாதையில் ஏற்கனவே ரயில்வே தரைபாலம் அமைந்துள்ளது. இந்த தரைபாலம் வழியாக பாண்டியன் நகர், வடகரை, வடகரை புதுார், நடுக்கோட்டை வழியாக காரியாபட்டி சாலையை அடையலாம்.

பல ஆண்டுகளாக இந்த தரைபாலத்தில் டூவிலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் இரட்டை வழிப்பாதைக்காக இந்த தரைபாலத்தினை தற்காலிகமாக ரயில்வே நிர்வாகம் நேற்று மூடியுள்ளது. வடகரை தரைபாலத்தை பயன்படுத்தியவர்கள் அருகேயுள்ள பாண்டியன் நகர் ரயில்வே கேட் அல்லது சாஸ்திரிபுரம் ரயில்வே கேட்டினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் விரைவில் பணிகள் நிறைவடைந்து தரைபாலம் மீண்டும் திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: