ஆண்டுக்கு ரூ.12 கோடி வரி கட்டியும் அடிப்படை வசதி செய்ய மறுக்கும் மாநகராட்சி மார்ச் 3ல் உண்ணாவிரதம்

மதுரை, பிப். 21: கடந்த 9 ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து தரவில்லை என குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கொந்தளிப்பில் உள்ளனர். மதுரை புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் கடந்த 2011ல் சேர்க்கப்பட்டது. மாநகராட்சியின் விரிவாக்க பகுதியாக அறிவிக்கப்பட்டதில், ஆனையூர், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, வண்டியூர், நாகனாகுளம், உத்தங்குடி, ஆத்திகுளம் உள்ளிட்ட 11 வார்டுகள் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடங்குகிறது. இந்த பகுதிக்கு தேவையான குடிநீர், ரோடு, பாதாளசாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2011ல் இருந்து மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் மாநகராட்சி இதுவரை செயல்படுத்தவில்லை.  11 வார்டுகளில் உள்ள 125 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சேர்ந்து, அடிப்படை வசதி கேட்டு, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மக்களின் அடிப்படை தேவையை அறிய குழு அமைத்து நிறைவேற்ற வேண்டும். இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மாநகராட்சி இதுவரை குழு ஏதுவும் அமைக்கவில்லை.  இப்பிரச்னை குறித்து, தொகுதி எம்எல்ஏ மூர்த்தி, சட்டமன்றத்தில் 6 முறைக்கு மேல் பேசியுள்ளார். சட்டமன்ற மதிப்பீட்டு குழு மதுரை வந்த போது அடிப்படை வசதிகள் செய்ய நிதியுதவி செய்து தரக்கோரி மனு கொடுத்தார். ஆனால் நடவடிக்கையும் இல்லை.  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 11 வார்டில் உள்ள 125 குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, குடியிருப்போர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சித்திரவேல், வீரபாகு, முருகேசன், சீத்தாராமன், பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 9 ஆண்டுகளாக பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரினோம். கிடைக்கவில்லை. இனி போராடிதான் பெறவேண்டும் என பேசியவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில், பாதாளசாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வரும் மார்ச் 3ம் தேதி  பாண்டிகோயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சித்திரைவேல் கூறுகையில்,‘11 வார்டுகளில் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வில்லை. இப்பகுதி மக்கள் ஆண்டுக்கு ரூ.12 கோடி வீதம் இதுவரை ரூ.110 கோடி வரை மாநகராட்சிக்கு வரியாக செலுத்தியுள்ளோம். எங்கள் வரிப்பணத்தை வைத்து எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் மாநகராட்சி இதுவரை செய்யவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். அடுத்த கட்டமாக வரி கட்டப்போவது இல்லை. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் உள்ளோம்,’என்றார். 

Related Stories: