கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சருக்கு சிறை தண்டனை வழங்கிய பெண் நீதிபதிக்கு நன்றி தெரிவித்து நீதிதேவதை படத்திற்கு பாலாபிஷேகம்

மதுரை, பிப். 21: அமைச்சருக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த பெண் நீதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நீதிதேவதையின் படத்திற்கு சமூக சேவகி நர்மதா பாலாபிஷேகம் செய்தார். ஓசூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ண ரெட்டி. தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி போராட்டம் நடத்தினார். அப்போது பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

மேலும், அமைச்சருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி சாந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், ெபண் சமூக சேவகி நர்மதா, நீதிதேவதையின் படத்திற்கு நேற்று பாலாபிஷேகம் செய்தார். பின்னர் நர்மதா கூறுகையில், ‘‘இப்போது ரவுடியிசம் பெருகி விட்டது. இனிவரும் காலத்திலும் இதுபோன்று அநீதிக்கு எதிரான விஷயங்களுக்கு பாரபட்சமின்றி சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்’’ என்றார். பெண் சமூக சேவகி, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடத்திய பாலாபிஷேகம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: