நோயின் பிடியில் பொதுமக்கள் திண்டுக்கல்- காரைக்குடி ரூட்டில் நத்தம் சாலைகள் ரொம்ப மோசம்

நத்தம், பிப். 21: திண்டுக்கல்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் கோட்ட சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகி விட்டது. இதில் நத்தம் பகுதிகளில் உள்ள சாலை கோட்டபொறியாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறது. இது வந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. முதலில் மாநில நெடுஞ்சாலையாக இருக்கும் வரை சாலைகள் பழுதடைந்தால் சாலை பணியாளர்கள் அதனை சரிசெய்து வந்தனர். தற்போது தேசிய நெடுஞ்சாலையாகி நத்தம் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தின் கீழ் வந்ததிலிருந்து சாலை சீரமைப்பு பணியானது முழுமையாக செயல்படவில்லை. இதனால் சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. மேலும் சாலையோரங்களில் மணல்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘திண்டுக்கல்- காரைக்குடி சாலை வழியாக தேவகோட்டை, திருப்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கோவை சென்று வருவதற்கு முக்கியமான சாலையாக உள்ளது. மேலும் கனரக வாகனங்களும் இப்பகுதி வழியாக அதிகம் சென்று வருகின்றன. இதில் நத்தம் பகுதி சாலைகள் தற்போது சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். இதன்மூலம் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணிக்க முடியும்’’ என்றனர்.

Related Stories: