பட்டிவீரன்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் 3 பேர் படுகாயம்

பட்டிவீரன்பட்டி, பிப். 21: பட்டிவீரன்பட்டி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், 40 பேரை தேடி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகே சின்ன அய்யம்பாளையத்தில் கடந்த 15ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான வரவு, செலவு கணக்குகளை நேற்று முன்தினம் விழா குழுத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மண்டபத்தில் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சிலர் மண்டபத்தின் முன்பாக நின்று கூச்சலிட்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் ஜல்லிக்கட்டு குழுவை சேர்ந்த ராஜா (42), எதிர்தரப்பை சேர்ந்த பழனிகுமார் (39), குமார் (42) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் ராஜா மதுரை ஜிஹெச்சிலும், பழனிகுமார், குமார் திண்டுக்கல் ஜிஹெச்சிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 2 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு குழுவில் காயம்பட்ட ராஜா அளித்த புகாரில் பட்டிவீரன்பட்டி போலீசார் எதிர்தரப்பை சேர்ந்த நாகராஜன் உள்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதில் பாஸ்கரன், முத்தையா, கருப்பையா, சுப்பையா, குமரேசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். எதிர்தரப்பில் காயம்பட்ட பழனிகுமார் அளித்த குமாரில் ஜல்லிக்கட்டு விழா குழுத்தலைவர் கார்த்திகேயன் உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிந்து இதில் மருதுபாண்டி, ராம்குமார், தெய்வேந்திரன், முத்துராமன், சிவராமகிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் போலீசார் இருதரப்பிலும் 40 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கலவரம் காரணமாக அய்யம்பாளையத்தில் நேற்று கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு தெருக்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த மோதலால் அய்யம்பாளையம் வழியாக திண்டுக்கல், தாண்டிக்குடி பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: