தேர்தல் கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேரிடம் பத்திரம் எழுதி வாங்கும் போலீஸ்

திண்டுக்கல், பிப். 21: மாவட்டத்தில் தேர்தல் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 1000 பேரிடம் நன்னடத்தை சான்றிதழுக்கான பத்திரம் எழுதி வாங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல்களில் கலவரம் நடந்த பகுதிகள், ஓட்டு சீட்டில் மை ஊற்றியது, பெட்டியை தூக்கி ஓடியது,  தகராறில் ஈடுபட்டது உட்பட பல சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கொலை, கொலை முயற்சி வழக்குகளிலும் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது இவர்களிடம் ஆர்டிஓ அலுவலகத்தில் நன்னடத்தை சான்றிதழ் வாங்கப்படுகிறது. இதில் ஓராண்டுக்கு எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என (பத்திரம் பாண்டு) எழுதி தர வேண்டும். மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

 இதுகுறித்து எஸ்பி சக்திவேல் கூறுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 தேர்தல்களில் கலவரம் உட்பட பல செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என சுமார் 1000 ஆயிரம் பேரிடம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்குகிறோம். இதில் சாட்சிகளாக அவர்களின் உறவினர்கள் கையெழுத்திட வேண்டும். இவர்களை கண்காணிப்பதற்கு தனி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: