குஜிலியம்பாறை அருகே பரபரப்பு குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு அரசு விழாவாக நடத்தாமல் அதிமுக விழாவாக நடத்திய எம்எல்ஏ

குஜிலியம்பாறை, பிப். 21: குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பங்களிப்போடு அரசு விழாவாக நடத்தாமல் அதிமுக விழாவாக எம்எல்ஏ நடத்தி விட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பொதுமக்களுடன் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியை அதிமுகவினரை வைத்து கட்சி விழாவாக பரமசிவம் எம்எல்ஏ நடத்திவிட்டார் என குஜிலியம்பாறை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 2017ம் ஆண்டு டிச.31ல் முதல்வர் பழனிசாமி குஜிலியம்பாறை தனி தாலுகா அறிவிப்பு செய்தார். அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அரசாணை வெளியிடாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதம், 4 நாட்கள் நடைபயணம், தெருமுனை பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

எனினும் அரசு மெத்தன போக்கை கடைபிடித்து கிடப்பில் போட்டது. இதையடுத்து குஜிலியம்பாறை தனித்தாலுகா அரசாணை வெளியிட கோரி பிப்.25ம் தேதி சுமார் 5 ஆயிரம் மக்களை திரட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனித்தாலுகா அரசாணை வெளியிடப்பட்டு அன்றே குஜிலியம்பாறையில் வட்டாட்சியர் அலுவலகமும் திறக்கப்பட்டது. அரசு சார்பில் இவ்விழா நடத்தப்பட வேண்டும். ஆனால் திறப்பு விழா குறித்து பொதுமக்கள், விவசாய அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் என யாருக்குமே எந்த தகவலும் கொடுக்கவில்லை. மாறாக அதிமுக கட்சியினரை வைத்து மட்டும் பரமசிவம் எம்எல்ஏ திறப்பு விழா நடத்தியுள்ளார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த திறப்பு விழாவிற்கு கலெக்டர் 4 மணிநேரம் காத்திருந்தது மிகவும் வேதனையாக உள்ளது. எனவே வரும்காலங்களிலாவது அரசு விழாவை பொதுமக்கள் பங்களிப்போடு நடத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: