வில்பட்டியில் விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் 15 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு

கொடைக்கானல், பிப். 21: வில்பட்டி பஞ்சாயத்தில் விதிமீறி கட்டப்பட்ட 405 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறிய 1415 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கான பணிகளை நகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி வில்பட்டி கிராம பஞ்சாயத்து பகுதியில் அனுமதியற்ற, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் கூறுகையில், ‘‘ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அனுமதியற்ற, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை துவங்கியுள்ளோம்.

முதற்கட்ட ஆய்வில் வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட குறிஞ்சிநகர், அட்டுவம்பட்டி, சின்னபள்ளம், பெரும்பள்ளம், பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்ட 405 கட்டிடங்களுக்கு 271 1ஜே என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் கட்டிட உரிமையாளர்கள் பதிலளிக்க வேண்டும். உரிய பதிலை வழங்க மறுக்கும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இப்பணிகளை செய்து வருகின்றனர். வில்பட்டி கிராம பஞ்சாயத்து தவிர அடுக்கம் கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் இதுபோல் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: