பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லை மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

நெய்வேலி, பிப். 20: நெய்வேலி பகுதியில் தீ தடுப்பு கருவிகள் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நெய்வேலி பகுதியை சுற்றி ஏராளமான  தனியார் பள்ளிகள் மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகிறது. சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு   படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்ணீர் வசதி, சிமெண்ட் கட்டிடம், தீ தடுப்பு கருவிகள், முதலுதவி வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.  அதனை உறுதி செய்ய  கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் உத்தரவு உள்ளது.ஆனால் நெய்வேலி பகுதிகளில்  இன்றுவரை பல பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லாதது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக தீ தடுப்பு கருவிகளை புதுப்பிக்கவில்லை. அதனால் அதில் உள்ள வாயுக்கள் செயலற்று உள்ளது.

மேலும் சில நேரங்களில் பள்ளிகளில் தீயால் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த செயலற்ற காலாவதியான தீ தடுப்பு கருவிகள் பயனற்றதாக இருக்கும். அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.இதனால் நெய்வேலி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு உபகரணங்களை வைப்பதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவர்களின்  பாதுகாப்பிற்காக பள்ளிகளுக்கு சில உத்தரவுகள் வந்தாலும் அதனை முறையாக அதிகாரிகள்  பின்பற்றாமல்  அலட்சியமாக உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. குறுகலான இடங்களிலும், உரிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. தீ தடுப்பு மற்றும் முதலுதவி உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அரசு பள்ளிகள் உள்பட பெரும்பாலான பள்ளிகளில் இவைகள் இருப்பதில்லை.

இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டிய கல்வி அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு சாதனங்கள் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழலையர் பள்ளிகள் என்ற பெயரில் பல இடங்களில் குழந்தைகளுக்கு எவ்வித வசதிகளும் இல்லாமல் திறக்கப்பட்டு வருகிறது. இதனையும் மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: