நவீன இறைச்சி கூடம் பயன்பாட்டுக்கு வராத அவலம்

உளுந்தூர்பேட்டை, பிப். 21:  உளுந்தூர்பேட்டை சிறப்பு நிலை பேரூராட்சியில் சேலம் நெடுஞ்சாலை ஓரம் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின்கீழ் 2016-17ம் ஆண்டில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் நவீன இறைச்சி கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் ரோடு பகுதியில் உள்ள திறந்த வெளியில் மாடு இறைச்சிகளை வெட்டி விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையிலும், சாலையின் ஓரம் ஆடு இறைச்சி வெட்டி விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் இந்த நவீன இறைச்சி கூடம் கட்டப்பட்டது.

ஆனால் இதுவரையில் எந்த இறைச்சி கடைகளும் இந்த இடத்தில் வைத்து விற்பனை செய்யப்படுவது இல்லை. இதனால் ரூ.36 லட்சத்தில் கட்டிய புதிய கட்டிடம் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரூ.36 லட்சத்தில் கட்டிய புதிய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: