டாக்டர்கள், செவிலியர்கள் திடீர் போராட்டம்

விக்கிரவாண்டி, பிப். 21: விழுப்புரம் அருகே பனங்குப்பத்தை சேர்ந்தவர் திருமலை மகன் இருசன்(40), விவசாயி. நேற்று இவர் அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்தவர்கள் அவரை ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் இருசனுக்கு எக்ஸ்ரே எடுத்து ரிசல்ட் வருவதற்காக டாக்டர்கள் காத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருசனுடன் வந்த அவரது மகன் அன்பு (20) அவசர சிகிச்சை பிரிவில் இருந்த செவிலியர்களிடம் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தாமதப்படுத்துவதாக கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள், தங்களை பணி செய்யவிடாமல், தரக்குறைவாக பேசுவதாக கூறி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்களுக்கு ஆதரவாக டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மருத்துவமனை டீன் சங்கர நாராயணன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் வந்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Related Stories: