காரைக்காலில் தெரு நாய் தொல்லை அதிகரிப்பு

காரைக்கால், பிப். 21: காரைக்கால் நகர் பகுதியில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்களால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். போர்க்கால அடிப்படையில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த காரைக்கால் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காரைக்கால் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக, அளவுக்கு அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், பொதுப்பணித்துறை, வருவாய்துறை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் திரிவதால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. குறிப்பாக, கோழி, ஆடு, மீன் கடைகளை வைத்துள்ளோர் சாலையோரம் கழிவுகளை வீசியெறிவதால், அங்கு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது. சில இடங்களில் வெறி நாய்களும் சுற்றி திரிகின்றன. இந்த நாய்களால் ஆடு, மாடு மட்டுமின்றி மனிதர்களும் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் நாய்க்கடியால் பலியாகியுள்ளன. கடந்த வாரம் ஒரே நாளில்  12 பேரை வெறிநாய்கள் கடித்துள்ளன.

அதில் 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே, காரைக்கால் நகரப்பகுதியில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தை, மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரபாகர் கூறுகையில், வெறிநாய்கள் குறித்து, காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பலர் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகரித்து வரும் நாய் தொல்லையால் காரைக்காலில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். பல இடங்களில் சாலையில் நடந்து செல்வோரை எல்லாம் நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் கூட அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. முக்கியமாக கலெக்டர் அலுவலகம், கடற்கரை, மார்க்கெட், பேருந்து நிலையம் அருகில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிகின்றன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: