அங்கீகாரமின்றி இயங்கிவரும் காரைக்கால் பஜன்கோ கல்லூரி

புதுச்சேரி, பிப். 21:  காரைக்கால் பஜன்கோ கல்லூரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரமில்லாமல் இயங்கி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் அண்டை மாநிலங்களில் உயர்க்கல்வி, வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1987ம் ஆண்டு முதல் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி (பஜன்கோ) இயங்கி வருகிறது. இக்கல்லூரி 2014ம் ஆண்டு வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) அங்கீகாரம் பெற்ற கோவை வேளாண் கல்லூரியுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு தகுதியான கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உயர்கல்வி படிக்கவும், வேலைவாய்ப்புக்கும் எவ்வித தடையுமின்றி விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் புதுவை அரசு கடந்த 2015-16 முதல் புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் மட்டும் அங்கீகாரம் பெற்ற விவசாயம் மற்றும் தோட்டக்கலை பாடப்பிரிவுகளை தொடங்கி, மாணவர்களை சேர்த்து கல்லூரியை நடத்தி வருகிறது. இதனால் பஜன்கோ கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் அண்டை மாநிலங்களில் உயர்க்கல்வி படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏனென்றால், பஜன்கோ கல்லூரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெறவில்லை. இதனை காரணம் காட்டி இங்குள்ள மாணவர்கள் பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுவை அரசிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் பல முறை மாணவர்கள் அணுகி கேட்டதற்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பதிவு தேவையில்லை என கூறி தட்டி கழித்துள்ளனர்.

ஆனால் ஐசிஏஆரின் அங்கீகாரத்தை பெறாததால், பஜன்கோ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புதுவையில் மட்டுமே உயர்க்கல்வி பயில முடியும். வேறு எங்கும் உயர்க்கல்வி பயில முடியாது. அதேபோல் வேலைவாய்ப்பிலும் புதுவை தவிர்த்து வேறு எங்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இப்பிரச்னையில் புதுவை அரசு தலையிட்டு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரத்துடன் வேளாண் கல்லூரிகளை நடத்தி வருகின்றன. ஆனால், காரைக்காலில் உள்ள பஜன்கோ கல்லூரி மட்டும் ஐசிஏஆரின் அங்கீகாரமின்றி இயங்கி வருகிறது. இதனால் அண்டை மாநிலங்களில் உயர்க்கல்வி படிக்கவும், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் முடியாது. எனவே, மாணவர்கள் நலன் கருதி ஐசிஏஆர் அங்கீகாரத்தை மே மாதத்துக்கு முன்பு பெற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: