என்ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு

புதுச்சேரி,  பிப். 21: தேஜ கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்ஆர் காங்கிரசுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் தேஜ கூட்டணி  உறுதியாகி உள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாமக-7, பாஜக-5 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டு விட்டன. தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறது. தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்  இருப்பதை அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமி உறுதிபடுத்தி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை சென்ற  ரங்கசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து பேசினார். அப்போது தேஜ கூட்டணியில் புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு பாஜக, பாமகவும் ஒப்புதல் தெரிவித்து விட்டது.

சீட்டை பாமக கேட்காததால், என்ஆர் காங்கிரசுக்கு சீட் உறுதியாகி விட்டது. இதனிடையே பாஜக மாநில தலைவர் சாமிநாதன்  தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னை சென்று, கட்சியின் மேலிட  பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பாஜகவுக்கு சீட் கேட்டனர். அப்போது புதுச்சேரியை என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு சீட்டை ஒதுக்குவதுதான் சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துவிட்டனர். எனவே போட்டியிடும் முடிவை அதிமுகவும் கைவிட்டுள்ளது. இதனால் புதுவை மக்களவை தொகுதியில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி  விட்டது. அக்கட்சியின் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே அவரது படத்தை போட்டு ஜக்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு என்.ஆர். காங்கிரசார் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே  ரங்கசாமி நேற்றிரவு மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோரை நேரில் சந்தித்து புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். புதுவை தொகுதி என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதன் மூலம் அக்கட்சியுடனான பழைய கசப்பான அனுபவங்களை மறந்து  ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க வேண்டிய நிலைக்கு அதிமுக, பாஜ, பாமகவினர் தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: