குப்பை தொட்டியாக மாறி வரும் ஊராட்சி கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

உடன்குடி, பிப்.21: தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், குக்கிராமங்களிலும் அரசுக்கென புறம்போக்கு நிலங்கள், சொந்த நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலங்களில் அரசு கட்டிடங்கள் மற்றும் தேவைக்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்வர்.  பல ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கில் கொண்டு சுமார் 40அடி முதல் 75அடி ஆழத்திற்கு கிணறுகள் தோண்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கென அமைக்கப்பட்ட பொதுக்கிணற்றில் வாளி, ஓலைகளில் பின்னப்பட்ட கூடை போன்றவை கொண்டு கயிற்றில் கட்டி கையால் இறைத்தனர். காலப்போக்கில் கையால் தண்ணீர் இறைப்பதுமாறி மின்மோட்டார்கள், குடிநீர் தொட்டி அமைத்து பயன்படுத்த தொடங்கினர்.

இந்நிலையில் ஆங்காங்கே போர்வெல்கள் அமைத்ததின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்திற்குச் சென்றது. இதன் காரணமாக கிணற்றில் தண்ணீர் வற்றி போர் போட்டால் தான் தண்ணீர் எடுக்க முடியும் என்ற நிலை வந்தது. இதனையடுத்து தண்ணீருக்கென கிணறு பயன்படுத்தும் நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. இதன் காரணமாக உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் இருக்கும் பொதுக் கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறத் தொடங்கியது. மேலும் பல பகுதிகளில் குப்பை கிடங்காக மாறியதுடன் பொதுமக்கள் குப்பைகள் போட்டு தீவைத்து கொளுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த நிலைகள் மாறிடவும் ஊராட்சி கிணறுகளில் உள்ள குப்பைகளை அகற்றி அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குப்பை கிடங்கான ஊராட்சி கிணறுகளை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கென அமைக்க வேண்டுமென பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: