போக்குவரத்துக்கு லாயக்கற்ற செய்துங்கநல்லூர் - சிவந்திப்பட்டி சாலை

செய்துங்கநல்லூர், பிப்.21: செய்துங்கநல்லூரில் இருந்து சிவந்திப்பட்டி செல்லும் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். செய்துங்கநல்லூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான செய்துங்கநல்லூர்- சிவந்திபட்டி செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி மற்றும் பிரசித்தி பெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலும் உள்ளது. மேலும் ராமன் குளம், குத்துகல், முத்தூர், கொடிக்குளம், சிவந்திபட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல மிக முக்கியமான சாலையாக இந்த சாலை விளங்குகிறது. ஆனால் இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஜல்லிகற்கள் பெயர்ந்து மிக மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சில இருசக்கர வாகனங்கள் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இருந்து சிவந்திபட்டி சாலையில் செல்லும் போதே அங்குள்ள பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.

இதுகுறித்து சுந்தரபாண்டிய சாஸ்தா மும்பை அன்னதான அறக்கட்டளை  செயலாளர் தாஸ் கூறும்போது, பங்குனி உத்திரத்தின் போது சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலுக்கு பல வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். இங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த வழியை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்தி தேர்வு, டைப்ரைட்டிங் தேர்வு உள்பட பல தேர்வுகள் நடைபெறும். அப்போது ஏராளமான மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்து செல்வார்கள். மிக முக்கிய இந்த சாலை போடப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. இதுவரை நெடுஞ்சாலை துறையினர் பராமரிக்காததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. பங்குனி உத்திரத்திற்கு முன்பு இந்த சாலையை செப்பனிட்டால் பக்தர்கள் பயன்பெறுவார்கள் என்றார். இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: