ஒப்பந்ததாரர்களின் பிணை வைப்பு தொகை கையாடல் கலெக்டர் அதிரடி உத்தரவு

வேலூர், பிப்.21: வேலூர் ஒன்றியத்தில் அதிகாரிகளால் கையாடல் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களின் பிணை வைப்பு தொகையை தவணை முறையில் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் ஒன்றியத்தில் கடந்த 2015-16, 2016-17ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்து செய்த ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஏலத்தின் போது செலுத்திய 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையான பிணை வைப்பு தொகை, அவர்கள் பணியை முடித்ததும் திருப்பியளிக்கப்பட வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களை சொல்லி இந்த பிணை வைப்பு தொகையை ஒப்பந்ததாரர்களிடம் வழங்காமல் அதிகாரிகள் கையாடல் செய்ததாக அப்போது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது தினகரன் நாளிதழில் புள்ளி விவரங்களுடன் விரிவான செய்தியும் வெளியானது. இவ்வாறு மொத்தம் 1.60 லட்சம் கையாடல் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இவ்வாறு வேலூர் ஒன்றியத்தில் பதிவு செய்த 54 ஒப்பந்ததாரர்களில் 9 பேரின் பிணை வைப்பு தொகை கையாடல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் அப்போதைய பிடிஓ லியோபால்நிர்மல்குமார், துணை பிடிஓ அப்துல்கலீல், அப்போதைய கணக்காளர் கார்த்திகேயன், இளநிலை உதவியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து, அவர்கள் பணம் கையாடலில் ஈடுபட்டது உண்மை என்று விசாரணையில் தெரிய வந்தது. இதில் லியோபால்நிர்மல்குமார், இளநிலை உதவியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். கார்த்திகேயன் சோளிங்கரில் துணை பிடிஓவாகவும், அப்துல்கலீல் மாவட்ட ஊராட்சியிலும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர்களின் பிணை வைப்பு தொகையான 1.60 லட்சத்தில் லியோபால்நிர்மல்குமார் 15 ஆயிரம், அப்துல்கலீல் 32 ஆயிரம், கார்த்திகேயன் 44 ஆயிரம், வெங்கட்ராமன் 69 ஆயிரம் என செலுத்த வேண்டும் என்றும், இதனை அவரவர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 16 தவணைகளாக பிடித்தம் செய்ய வேண்டும் கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: