×

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடியிலும் வீடியோ பதிவுக்கு ஏற்பாடு வீடியோ கிராபர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்களவை தேர்தலை முன்னிட்டு 2,372 வாக்குச்சாவடியிலும் வீடியோ கண்காணிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, வீடியோ கிராபர்களிடம் விலைப்புள்ளி பெறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு, வாக்காளர் பட்டியலுக்கு இறுதி வடிவம் அளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும், மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடியிலும் வீடியோ கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதன்மூலம், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் விதிமீறல்கள், ஆள் மாறாட்டம், அத்து மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடியிலும், வீடியோ கிராபர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி, குறைந்த விலைப்புள்ளி கோரும் நபர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் வீடியோ கிராபர்கள் தங்களுடைய விலைப்புள்ளியை வரும் 24ம் தேதி வரை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பூட்டி சீலிடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பொது தேர்தல்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தேர்தலில், அனைத்து வாக்குச்சாவடியிலும் வீடியோ கண்காணிப்பும், பதற்றமான வாக்குசாவடிகளில் ஆன்லைன் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், மாவட்டம் முழுவதும் உள்ள 2,372 வாக்குச்சாவடியிலும் பணியில் ஈடுபடுத்தும் எண்ணிக்கையில் வீடியோ கிராபர்கள் விண்ணப்பிப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், கடந்த தேர்தலின் போது வீடியோ கிராபர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,500 வழங்கப்பட்டது. அதிலும், குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தும், பல மாதங்கள் அலைகழித்தும் வழங்கியதால் வீடியோ கிராபர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால், இந்த தேர்தலில் வீடியோ பதிவு செய்ய வீடியோ கிராபர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, நாளொன்றுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்கவும், பணி முடிந்ததும் அதற்கான தொகை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டும் வீடியோ கிராபர்களை தேவையான எண்ணிக்ைகயில் நியமிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Tags : voting ,elections ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...