ராஜாக்கமங்கலம் அருகே 84 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

நாகர்கோவில், பிப்.20: ராஜாக்கமங்கலம் அருகே 84 ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் வளமான கடல் பகுதிகளை கொண்டதாகும். இதனால் இந்த பகுதியில் கடல் வாழ் ஆமைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிடுவது வழக்கம். இந்த முட்டைகளை மனிதர்கள் எடுத்து உணவாக உட்கொள்ள தொடங்கினர். இவ்வாறு முட்டைகளை அழிப்பதால் ஆமை இனங்கள் அழியும் நிலை உருவானது. இதையடுத்து ஆமைகளை பாதுகாக்கும் வகையில் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தென்பாற்கடற்கரை பகுதியில் ஆமை பொரிப்பகம் உருவாக்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம் துறை, ஆயிரங்கால் பொழிமுகம், தெற்குறிச்சி, அழிக்கால், வீரபாகுபதி, சொத்தவிளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து ஆமை முட்டைகளை சேகரித்து பொரிப் பகத்துக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு கடந்த ஜனவரி 2ம் தேதியில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி வரை மொத்தம் 2,533 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. முட்டைகள் பொரிப்பதற்கு வைத்த 45 நாட்களில் குஞ்சு பொரிக்கும். அதன்படி ஜனவரி 2ம் தேதி வைக்கப்பட்ட 112 முட்டைகள் 45 நாட்களுக்கு பின் பார்க்கப்பட்டன. அதில் மொத்தம் 84 முட்டைகளில் குஞ்சு பொரிக்கப்பட்டு இருந்தன. இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை ராஜாக்கமங்கலம் தென்பாற்கடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே ஆமை குஞ்சுகளை கடலில் விடுவதை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, உதவி கலெக்டர் பவன்

குமார் கிரியனப்பவர், பயிற்சி கலெக்டர் பிரதீக் தயாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வனச்சரகர்கள் புஷ்பராஜ், திலீபன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், குமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் பல்வேறு வளங்களை கொண்டதாகும். இந்த கடல் பகுதியில் அதிகளவில் ஆமைகள் உள்ளன. ஒரு ஆமை குறைந்த பட்சம் 150 முட்டைகள் வரை இடும். குமரி மாவட்டத்தில் கடந்த 2018ல் அதிகபட்சமாக ஒரு ஆமை 129 முட்டைகள் இட்டுள்ளன. ஆமை பொரிப்பகத்தில் மொத்தம் 2,533 முட்டைகள் இருந்தன. இதில் ஜனவரி 2ம் தேதி வைக்கப்பட்ட 112 முட்டைகளில் 84 ஆமை குஞ்சுகள் வந்துள்ளன. இவற்றை கடலில் விட்டு உள்ளோம். பெரும்பாலும் கடலுக்குள் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி சென்று பின்னர் கடல் பாசிகளை இவை உணவாக உட்கொள்ளும். வழியில் கடல்பறவைகள் ஆமை குஞ்சுகளை தூக்கி சென்று விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார். அடுத்த கட்டமாக ஜனவரி 7ம் தேதி வைக்கப்பட்ட 99 ஆமை முட்டைகளில்  எத்தனை குஞ்சுகள் பொரிக்கப்பட்டு உள்ளன என்பதை, இன்னும் இரு நாட்களில் பார்க்க உள்ளதாக வனத்துறையினர் கூறினர்.

Related Stories: