காயல்பட்டினத்தில் நகராட்சி நலத்திட்டப்பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

ஆறுமுகநேரி, பிப். 20: காயல்பட்டினம் நகராட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நிறைவுபெற்ற பணிகளைத் துவக்கிவைத்தார்.

 காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ,  ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டினார். மேலும் ரூ.1.96 கோடியில் சாலைப் பணிகள், ரூ.60 லட்சம் செலவில் உயரி எரிவாயு நிலைய பணிகளைத் துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்களுக்கான அடிப்படை வசதிகள், தேவை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அரசு உடனடியாக செய்துக்கொடுத்து வருகிறது.

 மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளான கோவில்பட்டியிலும், காயல்பட்டினத்திலும் அடிப்படை தேவையான தகவல் தொடர்பு சாதனம், குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை உடனடியாக செயல்படுத்திவருகிறோம்.

  முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இலவச அரிசியும், ஹாஜி பயணம் மேற்கொள்பவருக்கு மானியமும் தனது சொந்த ஏற்பாட்டிலேயே செய்து கொடுத்தார். அவரது வழியிலே எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் அண்ணன் எடப்பாடி அரசுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்’’ என்றார்.பின்னர் ஹலோ காயல் என்ற சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.  காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் 7598950800 என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நமது நாட்டிற்கான வீரமரணமடைந்த வீரர்களுக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, நகராட்சி ஆணையாளர் முருகன் வரவேற்றார். விழாவில் திருச்செந்தூர் ஆர்டிஓ மணிராஜ், திருச்செந்தூர் தாசில்தார் தில்லைபாண்டி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், பணிமேற்பார்வையாளர் சுதாகர், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி  ஆவின் தலைவர் சின்னத்துரை, நகர்மன்ற முன்னாள் தலைவர்கள் செய்யது அப்துல் ரஹ்மான், வஹிதா, முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அபுல் ஹசன் கலாமி, வாவு சுலைமான், அமானுல்லா, வாவு செய்யது ரகுமான், அதிமுக நகரச் செயலாளர் செய்யது இப்ராகீம், அன்வர், பூந்தோட்டம் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகராட்சிப் பொறியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: