குமரெட்டியாபுரத்தில் மாசித் திருவிழா தேரோட்டம்

விளாத்திகுளம், பிப். 20:   விளாத்திகுளம் அடுத்த குமரெட்டியாபுரம் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.

 விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நேற்று மாலை நடந்தது.  இதையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

 இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், டிஎஸ்பி தர்மலிங்கம் உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர். இதில் பெருந்திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் அரோஹரா கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.

Related Stories: