×

பாதுகாப்பு கெடுபிடிகள் வாபஸ் சகஜ நிலைக்கு திரும்பியது கவர்னர் மாளிகை சாலைகள்

புதுச்சேரி,  பிப். 20:  புதுவையில் பாதுகாப்பு கெடுபிடிகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில்,  கவர்னர் மாளிகை சுற்றியுள்ள சாலைகள் நேற்று சகஜ நிலைக்கு திரும்பியது. புதுவை  முதல்வர் நாராயணசாமி தர்ணா காரணமாக கவர்னர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில்  கடந்த 14ம்தேதி முதல் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டது. அதை சுற்றியுள்ள  அனைத்து பகுதிகளிலும் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்து முற்றிலும் தடை  செய்யப்பட்டது.
 தர்ணாவில் பங்கேற்கும் முக்கிய விஐபிக்கள் மட்டுமே  காவல்துறையால் அந்த சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற பொதுமக்கள் உள்ளே  வரமுடியாதபடி ரங்கபிள்ளை வீதி, நேருவீதி, செயின்ட் லூயிஸ் வீதி உள்ளிட்ட  சாலைகள் மூடப்பட்டன. பாரதி பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து  விடப்படாமல் 5 நாளாக மூடப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர்  கிரண்பேடியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தர்ணா ஒத்திவைக்கப்பட்ட  நிலையில், தலைமை தபால் நிலையம் எதிரே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி  கட்சியினர் தொடர் போராட்டத்திற்காக போட்டிருந்த சாமியானா பந்தல் நேற்று  காலை அகற்றப்பட்டது.
 அதேபோல் கவர்னர் மாளிகைக்கு செல்லும் அனைத்து  சாலைகளிலும் அமைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டு போக்குவரத்து  சகஜ நிலைக்கு திரும்பியது. அதேபோல் பாரதி பூங்காவும் திறந்து விடப்பட்டன.  மாசிமக தீர்த்தவாரியையொட்டி கடற்கரை பகுதிக்கு வந்த பொதுமக்கள்  குழந்தைகளுடன் பூங்காவுக்குள் சென்று விளையாடி மகிழ்ந்தனர்.
 அங்கு  போடப்பட்டிருந்த துணை ராணுவப்படை பாதுகாப்பும் இரவோடு இரவாக வாபஸ்  பெறப்பட்டது. மேலும் கடந்த 6 நாட்களாக இரவு- பகலாக அங்கு கண்காணிப்பு  பணிகளை மேற்கொண்ட போலீசாரும் காவல் நிலையம் திரும்பினர். அவர்கள் மாசிமக  தீர்த்தவாரி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த ஒரு  வாரமாக பரபரப்புடன் காணப்பட்ட கவர்னர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகள்  வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : security forces ,state governor ,roads ,
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு