மாடுகள் திருடிய 2 பேர் வசமாக சிக்கினர்

காலாப்பட்டு, பிப். 20: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மாடு கடந்த 3 நாட்களாக காணவில்லை. இதேபோன்று இதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மாடும் 3 நாட்களுக்கு முன் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மதகடிப்பட்டு சந்தைக்கு அந்த மாடுகள் விற்பனைக்கு வருகிறதா? என பார்ப்பதற்காக இருவரும் நேற்றிரவே மதகடிப்பட்டுக்கு சென்றனர். அதிகாலையில் அவர்களது மாடுகளை ஒருவர் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது, ரூ. 13 ஆயிரத்திற்கு இப்போது தான் 2 வாலிபர்கள் விற்று சென்றனர் என தெரிவித்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த 2 வாலிபர்களையும் அவர் அடையாளம் காட்டினார். தொடர்ந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

மாடுகள் காணாமல் போனது கோட்டக்குப்பம் காவல் நிலைய பகுதி என்பதால் அவர்கள் கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.கடந்த சில நாட்களாக கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போயுள்ளன. இதுகுறித்து 30க்கும் மேற்பட்டோர் கோட்டக்குப்பம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் பிடிபட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாடுகள் காணாமல் போனது குறித்து அதிகளவில் புகார் அளிக்க பொதுமக்கள் குவிந்ததால் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: