×

பிஆர்டிசி ஏசி பேருந்தின் கண்ணாடி வெடித்து சிதறியது

பாகூர், பிப். 20: பிஆர்டிசி ஏசி சொகுசு பேருந்தின் கண்ணாடி வெடித்து சிதறியதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி) சார்பில் கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நவீன ஏசி சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, கடலூருக்கு இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்துகளில் மக்கள் விரும்பி பயணம் செய்கின்றனர். ஆனால், பேருந்துகளை சரிவர பராமரிப்பு செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இதனால் அவ்வப்போது நடுவழியில் பேருந்துகள் நின்று விடும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்நிலையில் நேற்று காலை புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏசி சொகுசு பேருந்து கடலூருக்கு புறப்பட்டது. காட்டுக்குப்பம் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென வெடித்து சிதறியது. உடைந்த கண்ணாடி சிதறல்கள் தெறித்ததில் டிரைவர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறல் சத்தம் போட்டனர். உடனே பேருந்தை டிரைவர் நிறுத்தியதும் அனைவரும் பதறியடித்து கீழே இறங்கினர். மேலும், பேருந்தை சரிவர பராமரிப்பது கிடையாதா? என கேட்டு டிரைவர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பயணிகள் அதை ஏற்கவில்லை. பின்னர் அவ்வழியே வந்த தனியார் பேருந்தில் பயணிகள் அனைவரும் ஏறி கடலூர் சென்றனர்.

Tags : BRTC AC ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...