×

திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் மாசிமக தீர்த்தவாரி

வில்லியனூர், பிப். 20: மாசிமகத்தை முன்னிட்டு திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் கங்கைவராக நதீஸ்வரர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலமாகும். சங்கராபரணி ஆற்றங்கரையில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. ஆற்றங்கரையின் மற்றொரு பகுதியில் காசிவிஸ்நாதர் கோயில் உள்ளது. இதனால் ஆண்டு தோறும் மாசிமக தீர்த்தவாரியின் போது ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்காக கங்கைவராக நதீஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள ஆற்றங்கரையில் புண்ணிய தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம். காசியை விட வீசம் அதிகம் உள்ளதால் இந்த இடத்தில் புண்ணிய தர்ப்பணம் செய்வதால் எவ்வித பாவம் செய்த ஆன்மாவாக இருந்தாலும் முக்தியடையும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த மாதம் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டமும், நேற்று தீர்த்தவாரியும் நடந்தது. இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து கோயில் முன் போடப்பட்டிருந்த பந்தலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து விட்டு சாமியை தரிசனம் செய்தனர். எஸ்பி ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பழனிவேல், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், புனிதராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூனிச்சம்பட்டில் மாசிமக தீர்த்தவாரி: திருக்கனூர் அருகே உள்ள குமராப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திருக்கனூர், குமராப்பாளையம், கொடாத்தூர், முட்ராம்பட்டு, வழுதாவூர் ஆகிய பகுதியில் இருந்து சாமிகள் வந்து தீர்த்தவாரி கண்டருளின. இதேபோல் நேற்று கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சாமிகள் ஊர்வலமாக வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாகூர்: மாசி மகத்தையொட்டி பாகூர் அருகே புதுக்குப்பம், நரம்பை, நல்லவாடு ஆகிய பகுதிகளில் தீர்த்தவாரி நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சாமிகள் அலங்கரிக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டன. பொதுமக்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். கிருமாம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலிப்ெபருக்கி அமைக்கப்பட்டு கடலில் நீராடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. நீச்சல் வீரர்கள், முதலுதவி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காலாப்பட்டு: காலாப்பட்டு கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு, கனகசெட்டிகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரிய காலாப்பட்டு விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொம்மையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த கோயில் சாமிகளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Tags : Masimakha Theerthari ,river ,Thirukanni Shankaraparani ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...