×

கவர்னர், அமைச்சரவை பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவில்லை கட்டாய ஹெல்மெட் மீண்டும் தொடருமா?

புதுச்சேரி, பிப். 20:கவர்னர் கிரண்பேடியுடன் முதல்வர், அமைச்சர்கள் நடத்திய பேச்சுவாத்தையின்போது ஹெல்மெட் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் மீண்டும் தொடர்கிறதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் சட்டம் கடந்த 2017ல் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டுமென கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, டிஜிபி சுந்தரி நந்தா கட்டாய ஹெல்மெட் சட்டம் பிப்ரவரி 11ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார். அதன்படி, கடந்த 11ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன நம்பர்களை போலீசார் குறிப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கட்டாய ஹெல்மெட் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டாம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி இருந்தார். கவர்னர் கிரண்பேடியும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்தி எச்சரித்தார். ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன எண்களை குறிப்பெடுக்கும் பணி நீடித்தது. இதுவரை 30 ஆயிரம் பேரின் வாகன எண்கள் போலீசாரால் குறிக்கப்பட்டது. இதற்கிடையே, கவர்னர் மாளிகை எதிரே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். 39 கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இருந்தாலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் கட்டாய ஹெல்மெட் திட்டம் சற்று தளர்த்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் குறிப்பெடுப்பதையும் போலீசார் நிறுத்தினர். இதனால் ஹெல்மெட் அணிந்தவர்களும் அணியவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் முதல்வரின் 6 நாள் தர்ணா போராட்டம் கவர்னருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முடிவுக்கு வந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது ஹெல்மெட் விவகாரம் பற்றி பேசியதாக தெரியவில்லை. இதனால் ஹெல்மெட் அணிவதா? வேண்டாமா? என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கிடையே கட்டாய ஹெல்மெட் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச் சென்ற 30 ஆயிரம் பேரின் இருசக்கர வாகன நம்பர்களில் 1000 நம்பர்களை கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எஞ்சியுள்ள 29 ஆயிருக்கும் பேருக்கும் சம்மன் செல்லும் என தெரிகிறது.

Tags : governor ,negotiations ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...