நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்ப திருவிழா கோலாகலம்

நெல்லை, பிப். 20:  நெல்லையப்பர் கோயிலில் நேற்றிரவு அப்பர் பெருமான் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முற்காலத்தில் சைவ, சமண மதத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர், சைவ சமய குறவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் பக்தியை பரிசோதிக்கும் வகையில், அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்பர் பெருமான் சிவபெருமானை நினைத்து மனமுறுகி பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதக்க துவங்கியது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் பெருமையை உலகிற்கு உணர்த்தி, கடவுளின் திருக்காட்சி பெற்றார்.

அப்பர் பெருமானின் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறு, பாடல் பெற்ற சைவ சமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் நேற்றிரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி அருகிலுள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: