×

வரும் 23, 24ல் கடைசி முகாம் வாக்காளர் சேர்ப்பு, நீக்கல் பணியில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் திமுகவினருக்கு கே.என்.நேரு வேண்டுகோள்

திருச்சி, பிப். 20:  வாக்காளர் சேர்ப்பு, நீக்கல் பணியில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் என்று திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 31.1.19 அன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நமது பெயர்களை சரிபார்க்க, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்க மற்றும் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை தொடர்பாக தேர்தல் ஆணையம் வரும் 23.2.19 (சனி) மற்றும் 24.2.19 (ஞாயிறு) ஆகிய கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு வாக்குச்சாவடி முகாம் நடத்தவிருக்கிறது. முகாம் காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாக்குச்சாவடி முகாமே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான கடைசி முகாம் ஆகும்.
ஆகவே இந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடம் மாறுதல் ஆகியவற்றை செய்வதற்கான பணிகளில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகாம்களுக்கு நேரடியாக சென்று காலை முதல் மாலை வரை வாக்காளர் சரிபார்ப்பு பணியினை தொய்வின்றி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சேர்த்தல், நீக்குதல் பற்றிய விவரங்களை மாவட்ட கழகத்திற்கு  உடனடியாக தெரிவித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

Tags : camp ,removal ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு