×

டாப்செட்கோ கடனுதவி பிசி, எம்பிசி, சீர்மரபினர் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, பிப்.20:  திருச்சி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாப்செட்கோ) திட்டங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களான சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பம்புகள் மற்றும் இதர உபகரணங்கள் பொருத்துதல், குழாய் தொடரமைப்பு அமைத்தல், சொட்டு  நீர்ப்பாசன கடன் திட்டத்திற்கு ரூ.1,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடன் தொகையில் 50 விழுக்காடு வரை அதிகபட்சம் ரூ.50,000 அரசு மானியம் பின் நிகழ்வாக வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
வட்டி 6 சதம். பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000 கடனுதவி வழங்கப்படுகிறது. வட்டி 5 சதம். கறவைமாடுகள் வாங்க ரூ.60,000 கடனுதவி வழங்கப்படுகிறது. வட்டி 6 சதம். போக்குவரத்து இனங்களுக்கான காலக் கடன் மூலம் வாகனங்கள் வாங்கிட ரூ.3,13,000 கடனுதவி வழங்கப்படுகிறது. வட்டி 10 சதம். சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50,000 என அதிகபட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கல்விக் கடன் 1 சதம் வட்டி விகித்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் மூலம் கடன் உதவி பெற தகுதிகளாக பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும், திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும்  அலுவலக நேரங்களில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படக்க வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வு குழுவால் ஆய்வு செய்து கடன் பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Credit Bank ,MPC ,recipients ,
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.சி.க்கு...