இரண்டாவது நாளாக தொடரும் ஊழியர்களின் ஸ்டிரைக்கால் பிஎஸ்என்எல் சேவை முடக்கம் திருச்சி மண்டலத்தில் வாடிக்கையாளர்கள் அவதி

திருச்சி, பிப்.20:  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் செய்ததால் நேற்று இரவு முதல் பிஎஸ்என்எல் சேவை முழுவதுமாக முடங்கியது. இதனால் திருச்சி மண்டலத்தில் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு முழுவதும் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் துவங்கினர். 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உடனே வழங்க வேண்டும். ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு பணியாற்றும் 1200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேற்று முன்தினம் பிஎஸ்என்எல் அடிக்கடி தடை ஏற்பட்டு கிடைத்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு தொலைபேசி, பிராட்பேன்ட் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று முழுவதும் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்டர்நெட் சேவை பெறமுடியாமல் தொடர் அவதிக்குள்ளாகினர். பிரவுசிங், சென்டர், பிபிஓ அலுவலகம் உள்ளிட்ட ஆன்லைன் தொடர்பான அனைத்து சேவைகளும் முடங்கியது. நேற்று மாலை வரை எந்தவித பிஎஸ்என்எல் சேவையும் கிடைக்கவில்லை. திருச்சி மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் திரண்டு நேற்று இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி சிஐடியூ, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஏஐடியூசி, ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு போரட்டத்திற்கு ஆதாரவு தெரிவித்து பேசினர். நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மண்டல அலுவலகம் முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயே உணவு கொண்டு வந்து சாப்பிட்டனர்.

Related Stories: