முசிறி ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை வறுமை கோட்டிற்கு கீழுள்ள பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

தா.பேட்டை, பிப்.20:    முசிறி  ஆர்டிஓ அலுவலகத்தை வீரமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களை  வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளவர்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.  இதனடிப்படையில் முசிறி தொகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளில்  வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு  வருகிறது. இந்நிலையில் முசிறி ஒன்றியம் வீரமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த  பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்டிஓ அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கிருந்த ஆர்டிஓ ரவிச்சந்திரனிடம்  வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு  நடந்திருப்பதாகவும்,  பெயர்கள்  விடுபட்டுள்ளதாகவும், வசதியுள்ளவர்களின் பெயர்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளது எனவும் புகார் தெரிவித்தனர். இதனால் அலுவலக வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

 ஆர்டிஓ ரவிச்சந்திரன் பட்டியலை  சரிபார்ப்பதாகவும், பொதுமக்களின் கோரிக்கையை கலெக்டருக்கு   அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆர்டிஓ நேர்முக உதவியாளர்  கருணாநிதியிடம் கோரிக்கை மனுவினை அளித்துவிட்டு கலைந்து  சென்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் நல்லுசாமி என்பவர் கூறுகையில், தமிழக  அரசு பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், பட்டியலில்  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. வசதி  உள்ளவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

எனவே கலெக்டர் உண்மையான  பயனாளிகளை கண்டறிந்து ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு  அறிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Related Stories: