உடுமலையில் அறிவியல் திருவிழா போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

உடுமலை, பிப். 20: ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், கலிலியோஅறிவியல் கழகம், தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அறிவியல் திருவிழா உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம்தேதி நடக்கிறது. மாணவர்களுக்கு பேச்சு, வினாடிவினா, கட்டுரை, ஓவியம் போன்ற தனித்திறன் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.

23ம் தேதி காலை 9.30 மணிக்கு வினாடி வினா போட்டி நடக்கிறது. இதைத்தொடர்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு கணக்கும் இனிக்கும்- மாயச்சதுரங்கள் அமைப்பது எப்படி என்ற தலைப்பில் மதுரை ஜோதிராமலிங்கம், எளிய அறிவியல் சோதனைகள்- மேஜிக் நிகழ்வு, திருப்பூர் பிரபாகரன் தலைமையில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, ரோபோடிக்ஸ் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் சென்னை வேல் பல்கலை பேராசிரியர் பாலாஜியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் இந்திய மெடிக்கல் கவுன்சில் விஞ்ஞானி டாக்டர் சந்தோஷ்குமார் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. பங்குபெற விரும்பும் பள்ளிகள் மாணவர்களின் பெயர் பட்டியலை வரும் 22ம் தேதிக்குள் கண்ணபிரான், கலிலியோ அறிவியல் கழகம், பி-7, வித்யாசாகர் வீதி, காந்திநகர் அஞ்சல், உடுமலை 642 154 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: