திருப்பூரில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

திருப்பூர், பிப்.20: திருப்பூர், பல்லடம், காங்கயம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு திண்டிவனம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் 50  டன் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டு நாள்தோறும் 40 டன் அளவுக்கு மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நடப்பாண்டில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமின்றி தள்ளுவண்டிகளிலும் அதிக அளவில் தர்பூசணி விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி சில்லறை விற்பனையில் கிலோ ரூ.20க்கும், மொத்த விற்பனைக்கு ரூ.16க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, திண்டுக்கல் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும் நிலையில் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும் திண்டுக்கல் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் தர்பூசணிப் பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதாகக் கூறி வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து திருப்பூர் பழைய மார்க்கெட்டில் உள்ள தர்பூசணி மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க உள்ள நிலையில், விற்பனை அதிகரிக்கும் என்றனர்.

Related Stories: