தண்ணீர் பந்தல் காலனியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கால்நடைகளுக்கு எமனாகும் அபாயம்

திருப்பூர், பிப்.20: திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனியில் அகற்றப்படாமல் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், சுகாதாரத்துக்கு கேடு விளைவிப்பதுடன், கால்நடைகளுக்கு எமனாக மாறுகிறது.

தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மறுசுழற்சி மற்றும் மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை கொண்டு செல்கிறார்கள். என்றாலும் ஒரு சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் போதிய அளவு ஒத்துழைப்பு இல்லாததால், திருப்பூரில் உள்ள பெரும்பாலான கடைகளில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக வீடு மற்றும் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு, குடியிருப்பு பகுதிகளில் வீசி செல்கின்றனர். இதனால் மாநகரின் பல இடங்களில் மூட்டை, மூட்டையாக பிளாஸ்டிக் பைகளில் குப்பைகள் நிரப்பப்பட்டு குவிந்து கிடக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பிளாஸ்டிக் கவர்களை கட்டுப்படுத்த, அதிகாரிகள் பெரியளவில் முயற்சி எடுக்காததையே இது காட்டுகிறது. திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்துக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல்  காலனி பகுதியில், பிளாஸ்டிக் பை உட்பட பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. ரோட்டில் சிதறி கிடக்கும், இந்த குப்பைகள் வாரக்கணக்கில் அகற்றப்படாமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள குடியிருப்புவாசிகளின் கோழி, ஆடு உட்பட வளர்ப்புப் பிராணிகள், இங்கு மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை கிளறி, அதில் உள்ள உணவு எச்சங்கள், மண்ணில் உள்ள புழு, பூச்சிகளை கோழிகள் உண்கின்றன.

அதே போன்று மாடுகளும், பிளாஸ்டிக் கழிவுகளின் இடையில் உள்ள உணவுகளை தேடுகின்றன. இதில், உணவோடு சேர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகளையும் வளர்ப்புப் பிராணிகள் உண்ணும் போது, அவற்றின் உடலில் ஜீரணசக்தி குறைந்து, கால்நடைகள் உடல் உபாதைக்கு ஆளாகின்றன. சில நேரங்களில், மரணத்தை கூட சந்திக்கின்றன. திருப்பூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில், ஓரளவு கூட முன்னேற்றம் இல்லாதது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகப்பெரும் சவாலாகவே உள்ளது.

Related Stories: