×

அதிகாரிகளின் அலட்சியத்தால் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருப்பூர், பிப்.20: அதிகாரிகளின் அலட்சியத்தால், திருப்பூரில் பல இடங்களில் மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் தண்ணீரும், 3வது குடிநீர் திட்டத்தின் கீழ் பவானி தண்ணீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்குழாய் மூலமாகவும் உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பகுதிகளுக்கு இன்னும் 2வது திட்ட குடிநீர் வசதியே இல்லாத நிலை உள்ளது.
குடிநீர் சீராக வழங்கக் கோரி சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், திருப்பூர்  மாநகராட்சியில், பல இடங்களில், குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அவினாசி ரோட்டில் அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், தண்ணீர் பந்தல் காலனி என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல், கருவம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், சாலையில் தொடர்ந்து வீணாகும் குடிநீரால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து  கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:  எட்டு நாட்களுக்கு ஒருமுறை, இரண்டு மணி நேரம் மட்டுமே, குடிநீர் வருகிறது. தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், பல இடங்களில் குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டால், கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து குடிநீர் வெளியேறுவதால், ரோட்டோரம் குழி ஏற்படுகிறது. வாகனங்கள் சென்று வரசிரமம் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் உள்ளது. எனினும், இதை சரி செய்ய, அதிகாரிகள் முன்வரவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்