மாசிமக விழாவையொட்டி குடந்தையில் துறவியர் சங்கமம் மாநாடு

கும்பகோணம், பிப். 20: மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில் துறவியர் சங்கமம் மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டு ெகாடியை சேலம் மத் சுவாமி திவ்ய நாமானந்த மகராஜ் ஏற்றினார். மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜர் ஜீயர் சுவாமி தலைமை வகித்தார். பாதரக்குடி ரவீந்திர தேசிக சுவாமி, திருவண்ணாமலை திருப்பாத சுவாமி, சென்னை தாம்பரானந்தா, சேலம் சின்மயா மிஷன் சாய் விதானந்தா, உத்தண்டி ஈஸ்வரானந்தா, உளுந்தூர்பேட்டை யதீஸ்வரி நித்ய விவேகப்ரியாம்பா முன்னிலை வகித்தனர். மாநாட்டை ஒருங்கிணைப்பாளர் ராமானந்தா துவக்கி வைத்தார். கடந்தாண்டு அறிக்கையை சுவாமி வேதாந்த ஆனந்தா சமர்பித்தார்.

மாநாட்டில் காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டுதலின்பேரில் பயங்கரவாதிகளால் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் சில கட்சி தலைவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய நலனுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது. தேசவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சியினரை கண்டறிந்து தேர்தல் நேரத்தில் புறக்கணிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை காரணம் காட்டி கேரள மாநில கம்யூனிஸ்ட் முதல்வர் சபரிமலை மீதான இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைதொடர்ந்து சதுர்வேத பாராயணம், சைவத்திருமுறை பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், பஜனை, சத்சங்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாநாட்டில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சாதுக்கள், துறவிகள் பங்கேற்றனர். குத்தாலம் வீரராக சுவாமி நன்றி கூறினார்.

Related Stories: