பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவையாறு, பிப். 20: பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு திருவையாறு அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கீழத்திருப்பந்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016- 2017 மற்றும் 2017- 2018ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கவில்லை. இதை கண்டித்து தொடக்க கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காவிரி பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்து தஞ்சை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ரவிக்குமார், திருவையாறு தாசில்தார் இளமாருதி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ஓம்குமார் ஆகியோர் கள அலுவலர் முன்னிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு வழங்க பெற்ற காப்பீட்டு தொகை, இழப்பீடு சதவீதம் ஆகியவை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்ககளிலும் பயிர்காப்பு இழப்பீடு சதவீதம் மற்றும் வழங்கப்பட்ட தொகை, விவசாயி பெயர் விவரங்களுடன் அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: