50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்

கும்பகோணம், பிப்.20: கும்பகோணம் ஆதிவராக பெருமாள் கோயில் குளத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

கும்பகோணம் கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதியில் ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளது. மாசிமகம் தொடர்புடைய கோயிலாகும். இக்கோயிலின் பின்புறம் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள வராக குளத்தை கடந்த மகாமகத்தின்போது ரூ.40 லட்சம் மதிப்பில் சீரமைத்தனர். ஆனால் காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்கு தண்ணீர் திறந்து விட்டும் தேங்கி நிற்கவில்லை. இதையடுத்து குளத்தில் தண்ணீர் நிற்கும் வகையில் ரூ.16 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மோட்டார், தீர்த்தவாரி மண்டபம் ஆகியவற்றை கோயில் நிர்வாகத்தினர் சீரமைத்தனர். இதையடுத்து கோயில் குளத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் மாசிமக நட்சத்திரமான நேற்று வராக குளத்தின் கீழ்கரையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி மண்டபத்தில் அம்புஜவல்லிதாயாருடன் ஆதிவராக பெருமாள் காட்சியளித்தார். இதைதொடர்ந்து சின்னப்பெருமாள் (எ) தீர்த்தபேரருக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை கஞ்சனூரில் சுக்கிரன் கோயிலில் மாசிமக பெருவிழா  நடந்தது. இதையடுத்து காவிரியில் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதற்காக விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது.இதில் வரதராஜபெருமாளும் காவிரி கரைக்கு வந்தார். பின்னர் அஸ்திர தேவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

Related Stories: