தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் பெறுவோரின் முகவரிகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் தலைமை செயலாளருக்கு மனு

கும்பகோணம், பிப். 20: தமிழக தலைமை செயலாளருக்கு தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள்  இயக்க தலைவர் சுந்தரவிமலநாதன் கோரிக்கை மனு அனுப்பினார்.

அதில் தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த 35 லட்சம் பேருக்கும், நகர்ப்புறங்களை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் 25 லட்சம் பேருக்கு என மொத்தம் 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுமென சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2000 நிதியை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் 2002ம் ஆண்டில் கணக்கிடப்பட்ட பட்டியல் என்பது தற்போது இந்த திட்டத்துக்கு பொருத்தமானதாக இருக்காது.

2002ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவர்களின் பட்டியலில் பல்வேறு குளறுபடி, அரசியல் குறுக்கீடு, பல போலியான தகுதியற்ற பெரும் பணக்காரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை அப்போது பல சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தலைமை செயலருக்கு சுட்டி காட்டியிருந்தனர். அந்த பட்டியலில் உண்மையிலேயே ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பல லட்சக்கணக்கான பேர் இடம் பெற முடியாமல் இன்று வரை அவதிப்பட்டு

வருகின்றனர்.

புதிய குடும்ப அட்டைகள் பெற்று தனியாக வாழ்பவர்கள் பலர் வறுமைகோட்டு பட்டியலில் புதிதாக சேர்க்கப்படவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இறந்தவர்கள், பழைய பட்டியலில் இருந்து இன்று வரை நீக்கம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

எனவே இந்த நிதியுதவி திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்க முழு முகவரியுடன் கூடிய பட்டியலை உடனடியாக இணையதளத்திலும், உள்ளூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு ஒரு வாரத்துக்கு பின்னர்  பொதுமக்களின் ஆட்சேபனை, புகார் இல்லாதபட்சத்தில் உண்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: