பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, பிப். 20: பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாதவர்கள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் 2 கால், 2 கைகளும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மேற்படி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால், 2 கைகளும் செயலிழந்துள்ள மூத்த குடிமக்களான 60 வயதுக்கு உட்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உட்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் எஞ்சிய சிறப்பு நாற்காலிகளில் 10 சதவீதம் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.
Advertising
Advertising

எனவே மேற்கண்ட தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெறுவதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுவத்திறனாளி நல அலுவலகம், அறை எண் 14, தரைத்தளம், பிளாக் 3, கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சை என்ற முகவரியை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: