×

ஊட்டி-குன்னூர் சாலையில் மண்குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு

ஊட்டி, பிப். 20: ஊட்டி - குன்னூர்  சாலை விரிவாக்க பணிக்காக  மண் மற்றும் கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வேலிவியூ முதல் எல்லநள்ளி வரை மலையின் விளிம்பிலேயே சில இடங்களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   மிகவும் ஆபத்தான இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், விபத்து அபாயம் நீடித்தது.குறுகலான இச்சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் எல்லநள்ளி-வேலிவியூ இடையே உள்ள மந்தாடா பகுதியில் ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால், நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இவ்வழியாக பயணிப்பதில் அச்சம் கொண்டனர்.
இதற்கிடையே, இப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க சாலையை விரிவுபடுத்த வேண்டும் என  பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, இப்பகுதியில் சுமார் 50 அடி உயரத்திற்கு கான்கிரிட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்  நிம்மதியடைந்தனர். ஆனால், சாலை விரிவாக்க பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கற்குவியல்கள் மற்றும் மண் குவியல்கள் அகற்றப்படாமல் உள்ளது. இது சாலையை ஆக்கிரமித்துகொண்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் உள்ள மண் குவியல்களை அகற்றி, தார் சாலையோ அல்லது இன்டர்லாக் கற்களையோ உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Ottai-Coonoor ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி