வெள்ளலூர் குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வேட்டை

கோவை, பிப். 20: கோவை வெள்ளலூர் குளத்தில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வெள்ளலூர் குளத்தில் கடந்த பல வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. அரசு துறையினர், சமூக ஆர்வலர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் முயற்சியின் காரணமாக பல வருடங்களுக்கு பிறகு வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இதனால், வெள்ளலூர் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்தன. இதில், அதிகளவில் பெலிகான் பறவைகள் குளத்தில் உள்ள மரங்களில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்தது.  தற்போது 30 சதவீதம் தண்ணீர் குளத்தில் உள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் வெள்ளலூர் குளத்தில் அதிகளவில் பறவைகள் இருப்பது தெரியவந்தது. சுமார், 75 பறவை இனங்கள், 1,500 பறவைகள் குளத்தை சுற்றி காணப்படுகிறது. இந்நிலையில், குளத்தில் மீன் வளர்க்க குத்தகைக்கு எடுத்த நபர்கள் குளத்தில் வளர்ப்பு மீன்களை விட்டுள்ளனர். இந்த மீன்களை இரைதேடும் பறவைகள் கொத்தி செல்கின்றன. இதனால், பறவைகளை கவட்டை வைத்து அடித்து விரட்டுகின்றனர். இறந்த பறவைகளை சமைத்தும் சாப்பிடுகின்றனர். பறவைகள் வேட்டையாடுவதால், குளத்தில் இருந்த பறவைகள் இடம்பெயர்ந்து செல்ல துவங்கியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் வேட்டையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவது போல், கோவை வெள்ளலூர் குளத்தில் வாழும் பறவைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: