அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் ஆற்றலை அதிகப்படுத்த திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பு பயிற்சி

கோவை, பிப்.20: கோவை மாவட்டத்திலுள்ள 20 அரசு பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் ஆற்றலை அதிகப்படுத்தி, கல்வியில் ஈடுபாட்டை அதிகப்படுத்தும் திட்ட ஆய்வறிக்கை தயாரிக்கும் பயிற்சி நடக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களை படிக்கும் கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்களின் ஆற்றலை அதிகப்படுத்தி, கற்றலில் ஈடுபாட்டை அதிகரிக்கும் ‘ஸ்கோப்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த கோவை மாவட்டத்தில் 20 மேல்நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடத்திற்கு 5 மாணவர்கள் வீதம், 7 பாடத்திற்கு 35 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் 7 பாடங்களுக்கு 7 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள். மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஒரு குறிப்பிட்ட பாட தலைப்பை ஆய்வுக்கென தேர்வு செய்து, அதை செயல்படுத்த வேண்டும்.அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இத்தகைய திட்ட அறிக்கைகள் மாவட்ட அளவிலான தேர்வுக்கு உட்படுத்தப்படும். அதில் தேர்வு பெறும் திட்ட அறிக்கை மாநில அளவிலான தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இத்திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.1,500 வீதம், ஒரு பள்ளிக்கு 7 பாடத்திற்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 20 பள்ளிகளுக்கு ரூ.2.10 லட்சம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்ட செயலாக்கத்திற்கான மாவட்ட அளவிலான 20 பள்ளிகளின் 140 ஆசிரியர்கள் பங்கேற்ற ஒரு நாள் பயிற்சி முகாம் கோவையில் நடந்தது. இதில் சமக்ரா சிக்ஷா ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, குணேஸ்வரன்

ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  இது குறித்து அவர்கள் கூறுகையில், இத்திட்டத்தின் செயலாக்கம் இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க தேவையான வழிகாட்டுதல்கள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: